பட்டாசு ஆலை வெடிவிபத்து - படுகாயம் அடைந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

 
fire

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் படுகாயம் அடைந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

விருதுநகர் அருகே கோட்டநத்தம் கிராமத்தில் கோட்டைப்பட்டியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது தீடீரென உராய்வு காரணமாக பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  இந்த திடீர் தீ விபத்தில் அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த கட்டநாயக்கன்பட்டியை சேர்ந்த கருப்பசாமி (60), டி.சேடப்பட்டியை சேர்ந்த முத்துபாண்டி (40) ஆகிய 2 தொழிலாளர்களும் பலத்த காயம் அடைந்தனர்

இந்த தீ விபத்தால் அவர்கள் இருவருக்கும் 80 சதவீத தீக்காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து உடனடியாக தீக்காயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று அதிகாலை கருப்பசாமி மற்றும் முத்துப்பாண்டி இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.