செப்டிக் டேங்கில் தவறி விழுந்து சிறுவன் - 2 பேர் சஸ்பெண்ட்

செப்டிக் டேங்கில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சிங்கப்பெருமாள் கோயில் அடுத்த சாஸ்திரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் 6 வயதான பிரதீஷ். பிரதீஷ் பகுதியில் தண்ணீர் பிடிக்க சென்றதாக தெரிகிறது. சிறுவன் சென்று நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரது தந்தை சுற்றியுள்ள பகுதிகளில் மகனை தீவிரமாக தேடியுள்ளார். அப்போது ஊராட்சி அலுவலக வளாகத்தில் திறந்த நிலையில் இருந்த கழிவு நீர் தொட்டியில் சிறுவர் பிரதீஷ் மயக்க நிலையில் இருப்பதை தெரியவந்தது. சிறுவனை மீட்ட அப்பகுதியினர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சிறுவன் பாதி வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
வெங்கடாபுரம் ஊராட்சி நிர்வாகம் கழிவுநீர் தொட்டியை மூடி வைக்காமல் அலட்சியமாக இருந்ததன் காரணமாகவே 6 வயது சிறுவன் உயிரிழந்தார் என்று பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் வெங்கடாபுரம் பஞ்சாயத்து செயலாளர்உள்ளிட்ட இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் இது குறித்து விசாரித்த நிலையில் இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளார். தங்களது கடமையில் அலட்சியம் காட்டியதற்காக அவர்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். அத்துடன் வெங்கடாபுரம் பஞ்சாயத்து தலைவரிடம் இருந்து இது குறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும், செங்கல்பட்டு சப் கலெக்டர் தலைமையில் விரிவான விசாரணை நடத்தப்படுவதாகவும் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.