திமுகவினருடன் மோதல் - நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இருவர் கைது

 
dmk ntk clash

ஈரோடு மாவட்டம் வீரப்பசத்திரத்தில் திமுகவினர் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. இடைத்தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வீரப்பசத்திரத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டிருந்தார். அப்போது திமுக -நாம் தமிழர் கட்சி தொண்டர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த மோதலில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 4 பேர், திமுகவை சேர்ந்த 4 பேர், மற்றும் 3 போலீசார் உள்ளிட்ட 11 பேர் காயமடைந்தனர். மோதலையடுத்து அந்த பகுதியில் துணை ராணுவப் படையினர், போலீசார் குவிக்கப்பட்டனர். 

மோதல் விவகாரத்தில் இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மோதலில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இரு கட்சியினரும் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று இரவு நடைபெற்ற மோதல் தொடர்பாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுகவினருடன் நடந்த மோதல் தொடர்பாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த விஜய் மற்றும் கணேஷ் பாபு ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.