நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கிய 2 மீனவர்கள் - சீமான் வேதனை!!

 
fisher

திருச்செந்தூரைச் சேர்ந்த 2 மீனவர்களைத் தேடும்பணியை ஒன்றிய, மாநில அரசுகள் தீவிரப்படுத்த வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

fisher

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் , "திருச்செந்தூர் அமலிநகர் பகுதியைச் சேர்ந்த பிரசாத், அஷ்வின், நித்தியானந்தம் மற்றும் பால்ராஜ் ஆகிய நான்கு மீனவர்கள் கடந்த 01.08.22 அன்று பைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது, நள்ளிரவில் எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான செய்தியறிந்து மன வேதனையடைந்தேன். படகு விபத்தில் சிக்கிய நால்வரில் நித்தியானந்தம் மற்றும் பால்ராஜ் ஆகிய இரு மீனவர்கள் மீட்கப்பட்ட நிலையில், பிரசாத், அஷ்வின் ஆகிய இருவர் விபத்து நடந்து 2 நாட்களாகியும் மீட்கப்படாதது மிகுந்த கவலையளிக்கிறது.

seeman

ஒன்றிய, மாநில அரசுகளின் அலட்சியப்போக்கே மீனவர்களை மீட்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு முக்கிய காரணமென அப்பகுதி மீனவச்சொந்தங்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர். எனவே, காணாமல்போன மீனவர்களை மீட்பதற்குக் கடலோர காவற்படை மற்றும் விமானப்படையின் மூலம் தேடும்பணியை தீவிரப்படுத்த வேண்டுமென இந்திய ஒன்றிய அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், தமிழ்நாடு அரசு இரு மீனவர்களையும் பாதுகாப்பாக மீட்க இந்திய ஒன்றிய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.