சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - 2 பேர் பலி!

 
Sivakasi

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பள்ளப்பட்டியை சேர்ந்த கடற்கரை என்பவர் ஊராம்பட்டி என்ற கிராமத்தில் பட்டாசு ஆலை நடத்தி வந்தார். இவரது பட்டாசு ஆலையில் ஊராம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். வழக்கம் போல் இன்று காலை தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், திடீரென உராய்வு காரணமாக பட்டாசு வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கட்டிடத்தில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதறின. இந்த விபத்தில் அதே பகுதியை சேர்ந்த இருளாயி (வயது48), குமரேசன்(30), அய்யம்மாள்(54), சுந்தர்ராஜ்(27) ஆகியோர் மாட்டிக்கொண்டனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அங்கு சிக்கிக்கொண்ட 4 பேரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆபத்தான நிலையில் உள்ள 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெடி விபத்து தொடர்பாக மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெடி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சிவகாசியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.