ஆம்புலன்ஸ் மோதி இருவர் பலி! திருப்பதி கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாதயாத்திரையாக நடந்து வந்து கொண்டிருந்த பக்தர்கள் மீது 108 ஆம்புலன்ஸ் மோதி இருவர் பலியாகினர்.
ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டம் ராமசமுத்திரம் மண்டலத்தை சேர்ந்த பக்தர்கள் ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய புங்கனூரில் இருந்து பாத யாத்திரையாக கடந்த இரண்டு நாட்கள் முன்பு புறப்பட்டனர். இவர்கள் திருப்பதி மாவட்டம் சந்திரகிரி மண்டலம் நரசிங்கபுரம் அருகே சாலையோரத்தில் நடந்து திருப்பதி நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது மதனப்பள்ளியில் இருந்து திருப்பதி அரசு மருத்துவமனைக்கு நோயாளியை ஏற்றி கொண்டு வந்த 108 ஆம்புலன்ஸ் பக்தர்கள் மீது மோதியது. இதில் செம்பலாப்பள்ளிகிராமத்தை சேர்ந்த பெத்தா ரெட்டம்மா (40), செகம்வாரிப்பள்ளிகிராமத்தை சேர்ந்த லட்சுமம்மா (45) ஆகியோர் நிகழ்விடத்திலேயே இறந்தனர். மேலும் மூவர் காயமடைந்தனர் .
இறந்தவர்கள் உடல் மற்றும் காயமடைந்தவர்களை திருப்பதியில் உள்ள ரூயா அரசு மருத்துவமனைக்கி கொண்டு வரப்பட்டு சடலம் உடற்கூறு ஆய்வுக்கும் கொண்டு செல்லப்பட்டது. காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து சந்திரகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.