அதிகாரிகளின் அலட்சியத்தால் துடிதுடித்து பலியான 2 குழந்தைகள்
கமுதி அருகே அரசு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், அதிகாரிகளின் அலட்சியத்தால் ஏற்பட்ட மின்கசிவில் சிக்கி பலியான 2 குழந்தைகளின் குடும்பத்துக்கு உரிய துயர் துடைப்பு உதவிகளை வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அச்சங்குளம் கிராமத்தில் தம்பி மோகன் - லதா இணையரின் 11 வயதான நிறைமதி என்ற பெண் குழந்தையும், 6 வயது பால பிரவீன் என்ற ஆண் குழந்தையும் கடந்த (30.09.2026) அன்று காலை 8 மணி அளவில் அந்தப் பகுதியில் உள்ள அரசு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் (RO Plant) ஏற்பட்ட மின்கசிவால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
செயல்படாமல் இருந்த RO Plant -ல் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே ஏற்பட்டுள்ள மின்கசிவைச் சரிசெய்யக்கோரி அந்த கிராம இளைஞர்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் கொடுத்துள்ளனர். அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த இரண்டு பச்சிளம் குழந்தைகளின் உயிர் பறிபோய் இருக்காது. புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாகச் செயற்பட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலரும், தொடர்புடைய மின்வாரிய ஊழியர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

