வீட்டில் எலி தொல்லைக்கு வைத்த மருந்து நெடியால் 2 குழந்தைகள் பலி

 
ச்

சென்னை குன்றத்தூரில்  வீட்டில் வைக்கப்பட்டிருந்த எலி மருந்து காற்றில் பரவி இரண்டு குழந்தைகள் உயிர் இழந்த சம்பவத்தில் தனியார் பெஸ்ட் கண்ட்ரோல் கம்பனியை சேர்ந்த 3 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

Image


சென்னை குன்றத்தூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கிரிதரன்(34). தனியார் வங்கி மேலாளரான இவரது வீட்டில் எலி தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனியார் பெஸ்ட் கண்ட்ரோல் மூலம் வீட்டில் மருந்து வைத்ததாக கூறப்படுகிறது. பின்பு இரவு மனைவி பவித்ரா (31),ஆறு வயது மகள் வைஷ்ணவி, ஒரு வயது மகன் சாய் சுதர்சன் ஆகியோர் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு பின்னர் மீண்டும் வீட்டில் படுக்கையறையில் ஏசி போட்டு தூங்கி உள்ளனர். இதையடுத்து காலையில் அனைவருக்கும் மூச்சுத் திணறலுடன் வாந்தி, பேதியாகியுள்ளது.

இதையடுத்து  அருகே இருந்தவர்கள் வீட்டில் இருந்த கிரிதரன் ,பவித்ரா இரண்டு குழந்தைகளையும் குன்றத்தூரில் உள்ள மேத்தா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் ஆறு வயது சிறுமி வைஷ்ணவி,ஒரு வயது சிறுவன் சாய் சுதர்சன் ஆகியோர் உயிரிழந்தனர். இதை அடுத்து கிரிதரன் மற்றும் பவித்ரா ஆகியோர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பவித்ராவுக்கு நினைவு திரும்பியுள்ளது. அவரிடம் காவல்துறை நடத்தி விசாரணையில் வீட்டில் எலி மற்றும் பூச்சி தொல்லை இருந்ததால் ஆன்லைன் மூலம் தி.நகரில் உள்ள தனியார் பெஸ்ட் கண்ட்ரோலை அழைத்ததாகவும் தனியார் பேஸ்ட் கண்ட்ரோல் மூலம் வந்த நபர் ஒருவர் வீட்டில் கதவு ஜன்னல் உள்ளிட்டவற்றில் பேஸ்ட் போன்ற மருந்து வைத்ததாகவும் எலிக்கு வீட்டை சுற்றி டேப்லெட் வைத்ததாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட தனியார் பேஸ்ட் கண்ட்ரோல் கம்பெனியை சேர்ந்த நிர்வாகி  ஊழியர் என 3 மீது வழக்கு பதிவு செய்த குன்றத்தூர் காவல்துறையினர், வீட்டில் மருந்து அடித்த தினகரன் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் அதன் நிர்வாகி உட்பட 2 பேருக்கு சம்மன் வழங்கியுள்ளது. உயிரிழந்த  குழந்தைகளின் உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்விற்கு அனுப்பட்டுள்ளது. ஆனால் அதே பாதிப்பில் பெற்றோர் இருவரும் சிகிச்சையில் இருப்பதால், குழந்தைகள் இறந்ததை அவர்களிடம் இன்னும் தெரிவிக்க முடியவில்லை. இதனால் உடற்கூறாய்வு செய்வதில் சிக்கல்  ஏற்பட்டுள்ளது.