குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி
வேடசந்தூர் அருகே பண்ணை குட்டை தண்ணீரில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பாகாநத்தம் மலைப்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள், கூலி தொழிலாளி. இவரது மகன் ஹரி கிருஷ்ணன்(4வயது) அதே பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வந்தார். பெருமாளின் தங்கை சாந்தி என்பவரின் மகன் சபரீஸ்வரன்(7) என்பவர் பெருமாளின் வீட்டில் தங்கி மலைப்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று சபரீஸ்வரனும், ஹரி கிருஷ்ணனும் அதே பகுதியில் உள்ள விவசாயத் தோட்டத்தில் இருந்த பண்ணை குட்டை அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கால் வழுக்கி பண்ணை குட்டையில் தேங்கிய தண்ணீருக்குள் தவறி விழுந்து மூழ்கி உயிரிழந்தனர். விளையாடச் சென்ற சிறுவர்களை காணவில்லை என குடும்பத்தார் தேடிச் சென்றபோது இருவரும் பண்ணை குட்டை தண்ணீரில் மூழ்கி சடலமாக மிதந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த எரியோடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த சிறுவர்களின் உடலை கைப்பற்றி வேத பரிசோதனை செய்ய திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பண்ணை குட்டையில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி சிறுவர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


