1 முதல் 9ம் வகுப்பு வரை முன்கூட்டியே இறுதித் தேர்வு - பள்ளிக்கல்வித்துறை திட்டம்..

 
school

இன்ஃப்ளூயன்சா வைரஸ் காய்ச்சல் எதிரொலியாக  தமிழ்நாட்டில் முன்கூட்டியே இறுதி தேர்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையின் கீழ் மாநில கல்வி பாடத்திட்டத்தில் படிக்கக்கூடிய மாணவர்களில்,  12 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது  பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு  ஆண்டு இறுதித்தேர்வு நடத்துவது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிரடி முடிவை எடுத்துள்ளது. நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்சா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வரக்கூடிய சூழலில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்வுகளை முன்கூட்டியே நடத்துவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை பள்ளி கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.  

பள்ளிக்கல்வித்துறை

 பள்ளி மாணவர்களுக்காக  செய்ய வேண்டிய  பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. விரைவில் அது தொடர்பான முழு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   இந்த நிலையில் ஏப்ரல் மாதத்தில் இறுதியில் நடைபெற இருந்த ஒன்று 1  முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வை  முன்கூட்டியே நடத்த பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு இருக்கிறது. ஏப்ரல் 27ஆம் தேதி தொடங்க இருந்த  தேர்வுகளை 10 நாட்கள் முன்னதாக ஏப்ரல் 17ஆம் தேதியே தொடங்கி 24ம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கோடை வெயில் அதிகமாக இருப்பதாலும், இன்ஃப்ளூயன்சா   வைரஸ் காய்ச்சல்   வேகமாக பரவி வருவதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.