சென்னையில் நாளை விநாயகர் சிலை ஊர்வலம் — 18,500 போலீசார் குவிப்பு!

 
Q

சென்னையில் மட்டும் நாளை விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி 16,500 காவல் துறையினர், 2,000 ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 18,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு, திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய 4 இடங்களில் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல வேண்டும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலைகளை கரைக்கக்கூடிய இடங்களில் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் கண்காணிப்பு கோபுரங்கள், டிரோன்கள் மூலமாக தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் சென்னை காவல்துறை தரப்பில தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊர்வலத்தின்போது பட்டாசு வெடிக்க கூடாது எனவும், காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறுவோர் மீதும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.