மெரினா கடற்கரையில் இருந்து ஒரே நாளில் 18.5 டன் குப்பைகள் அகற்றம்..

 
மெரினா கடற்கரையில் இருந்து ஒரே நாளில் 18.5 டன் குப்பைகள் அகற்றம்.. 


சென்னை மெரினா கடற்கரையில் இருந்து 18.5 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.  

இந்திய விமானப்படையின் 92 ஆவது ஆண்டு விழாவையொட்டி விமான சாக நிகழ்ச்சிகள்  நேற்று நடைபெற்றன.  சென்னை மெரினாவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 15 லட்சம் மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிகளவிலான மக்கள் கூட்டத்தால் சென்னையே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது.  குறிப்பாக காமராஜர் சாலை, அண்ணா சாலை, சந்தோம் சாலை, LB சாலை, ஈவேரா சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை , வாலாஜா சாலை ஆகிய முக்கிய சாலைகளில் மக்கள்  வெள்ளத்தில் மூழ்கியது.  அதேபோல் கடற்கரை முழுவதும் மக்கள் தலைகளாகவெ காணப்பட்டன.  

மெரினா கடற்கரையில் இருந்து ஒரே நாளில் 18.5 டன் குப்பைகள் அகற்றம்.. 

நிகழ்ச்சியைக் காண வந்த மக்கள் பயன்படுத்திய தண்ணீர் பாட்டில்கள், உணவுப்பொருட்களின் பிளாஸ்டிக் கவர்கள் உள்ளிட்டவற்றை அங்கேயே போட்டுவிட்டுச் சென்றதால் கடற்கரை முழுவதும் குப்பைகளாக காட்சியளித்தது. முன்னதாக தயார் நிலையில் இருந்த சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் , குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த இளைஞர்கள், சிறுவர்களும் குப்பைகளை அகற்ற உதவி செய்தனர். 

இந்நிலையில்  சென்னை மெரினாவில் நேற்று விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில் 18.5 டன் குப்பைகள் மெரினா பகுதியில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. இதில்  4 டன் பிளாஸ்டிக் பாட்டில்கள் ஆகும். மெரினா பகுதியில் 128 தூய்மை பணியாளர்கள் இணைந்து குப்பைகளை அகற்றி உள்ளனர். 30க்கும் மேற்பட்ட குப்பை அள்ளும் வாகனங்கள், மண்ணில் உள்ள சிறிய குப்பைகளை அகற்றும் வாகனங்கள், கிருமி நாசினி வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.