பெரியகுளத்தில் 182 ஏக்கர் அரசு நிலம் அபகரிப்பு வழக்கு - வட்டாட்சியர் கைது

 
arrested

அதிமுக ஆட்சியில் தேனி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிலம் மெகா மோசடி வழக்கில் தொடர்புடைய வட்டாட்சியரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட வடவீரநாயக்கன்பட்டி, தாமரைக்குளம் மற்றும் வடுகபட்டி ஆகிய வருவாய் கிராமங்களில் உள்ள அரசு நிலங்கள் கடந்த அதிமுக ஆட்சியில் தனிநபர்களால் அபகரிக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த கடந்தாண்டு விசாரணை நடத்திய அப்போதைய பெரியகுளம் சார் - ஆட்சியர் ரிஷப், 2017 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் வருவாய் தொடர்பான 'அ' பதிவேட்டில் திருத்தம் செய்து  சுமார் 180 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்கள் தனிநபர்கள் பெயரில் பட்டா மாறுதல் செய்திருப்பது தெரியவந்தது. மேலும்  ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களில் இருந்த கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு மனையாக விற்பனை செய்திருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து மோசடி நடைபெற்ற காலகட்டத்தில் பணிபுரிந்த 2 வட்டாட்சியர்கள், 2 துணை வட்டாட்சியர்கள், நில அளவையர்கள் என 7 பேரை மாவட்ட ஆட்சியர் முரளீதரன் கடந்தாண்டு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து பெரியகுளம் சார் -  ஆட்சியர் ரிஷப் அளித்த புகாரில், முன்னாள் பெரியகுளம் வருவாய்க் கோட்டாட்சியர்கள் இருவர், மற்றும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட  தனிநபர்கள் என 10க்கும் மேற்பட்டோர் மீது தேனி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் துவக்கினர்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு நடைபெற்ற விசாரணையில், முதற்கட்டமாக கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி நில அளவையர் பிச்சை மணி, வட்டாட்சியர் அலுவலக  உதவியாளர் அழகர் மற்றும் ஆக்கிரமிப்பு செய்த முன்னாள் அதிமுக பிரமுகர் அன்னபிரகாஷ் ஆகிய 3பேர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர் கடந்த மே 5ஆம் தேதி இந்த வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மண்டல துணை வட்டாட்சியர் மோகன் ராம், நில அளவையர் சக்திவேல் மற்றும் உதவியாளர் செல்வராஜ் என மேலும் 3பேர் என 6பேர் இது வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.‌

இந்நிலையில் அரசு நில மோசடி வழக்கில் தொடர்புடைய பெரியகுளம் வட்டாட்சியராக பணிபுரிந்த கிருஷ்ணகுமார் என்பவர் இன்று சிபிசிஐடி போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார். தேனி சமதர்மபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் சுமார் 4மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற விசாரணைக்கு பின் கிருஷ்ணகுமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டார்.‌ 6 மாதத்திற்கு பிறகு அரசு நில மோசடி வழக்கில் தொடர்புடைய வட்டாட்சியர் சிபிசிஐடி போலீசார் கைது செய்திருப்பதால் இந்த வழக்கு மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.