அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடு முட்டி வேடிக்கை பார்க்க வந்த இளைஞர் உயிரிழப்பு..

 
ஜல்லிக்கட்டு

பிரசித்திபெற்ற  மதுரை அவனியாபுரம்  ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் 18 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் பங்கேற்றன.  ஒரு சுற்றுக்கு 50 மாடுபிடி வீரர்கள் வீதம் களமிறக்கப்படுகின்றன.  காலை முதல் நடைபெற்று வரும் இந்த ஜல்லிக்கட்டில் தற்போது வரை 75 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்களில் மாடுபிடி வீரர்கள்,  பார்வையாளர்கள் மற்றும் மாடு உரிமையாளர்களும் அடங்குவர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

அந்தவகையில் ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்க்க வந்த 18 வயது இளைஞர் ஒருவர்  மாடு முட்டி உயிரிழந்துள்ளார்.  வாடிவாசல் அருகே காளை வெளியில் வருவதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த  பாலமுருகன் என்ற அந்த இளைஞரை, சீறிப்பாய்ந்து வந்த காளை முட்டியது. இடது மார்பகத்தில் காளையின் கொம்பு குத்தியதாக கூறப்படும் நிலையில், பலத்த காயங்களுடன் அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும்  சிகிச்சை பலனின்றி பால முருகன் உயிரிழந்தார்.

ஜல்லிக்கட்டு

400 காளைகள் அவிழ்த்துவிடப்பட்ட வரை எந்த அசம்பாவிதங்களும் ஏற்ப்படாத நிலையில், 401 வது காளை தான் இளைஞரை முட்டியிருக்கிறது. ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்க்க வந்த சிலர் தடுப்புகளை மீறி காளை வாடி வாசலில் சீறிப்பாயும் இடத்திற்குள் சென்றதாகவும், அதனால் தான் இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்ப்பட்டதாகவும் கூறப்படுகிறது.  ஜல்லிக்கட்டின்போது மாடுமுட்டி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது