பிலால் பிரியாணி கடையில் கெட்டுப்போன பழைய உணவை சாப்பிட்டு 25 பேர் மருத்துவமனையில் அனுமதி

சென்னையில் உள்ள பிலால் பிரியாணி கடையில் கெட்டுப்போன பழைய உணவை சாப்பிட்டு 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர்கள் விக்னேஷ், ஸ்டீபன். இவர்கள் கடந்த 30 ஆம் தேதி நண்பரின் வீட்டை காலி செய்து வேறு இடத்திற்கு மாற்றுவதற்காக அவரது வீட்டுக்குச் சிலரை அழைத்துச் சென்றனர். வேலை முடிந்ததும் விக்னேஷ், ஜெய்சங்கர், ஷாம் விவேகானந்தன் மேற்கு சைதாப்பேட்டையை சேர்ந்த ஸ்டீபன், ரபேக்கா ஆகிய ஆறு பேர், திருவல்லிக்கேணிநெடுஞ்சாலையில் உள்ள பிலால் பிரியாணி உணவகத்தில் சாப்பிட்டுள்ளனர். மறுநாள் காலை அனைவருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போகவே சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அரசு காலரா மருத்துவமனையில் ஆறு பேறும் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் இரண்டு புகார்கள் அளிக்கப்பட்டன. அதே ஹோட்டலில் உணவு சாப்பிட்ட 10 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சார்பிலும் இன்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த, தேனாம்பேட்டை கல்லூரியில் படிக்கும் சகோதரிகள் இருவர், பெற்றோர் உறவினர்களுடன் சென்று 30ஆம் தேதி மவுண்ட் ரோட்டில் உள்ள பிலால் ஹோட்டலில் உணவு அருந்தியுள்ளனர். சில மணி நேரங்களிலேயே உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக Food poison காரணமாக வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் இருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2நாட்களுக்கு முன் இந்த கடையில் பீப் சவர்மா மற்றும் பிரியாணி சாப்பிட்ட மொத்தம் 25 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை திருவல்லிக்கேணி பிலால் பிரியாணி உணவகத்திற்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.