தமிழ்நாடு முழுக்க 1,695 ஸ்டாஃப் நர்ஸ் வேலை, மாதம் 21,000 சம்பளம்!

 
nurse

தமிழக அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. 

தேசிய நலவாழ்வுக் குழுமம் தமிழ்நாடு சார்பில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்வி மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் இயக்குநர் மற்றும் மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் இயக்குநரின் கட்டுப்பாட்டில் உள்ள ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தை ஆராய்ச்சி மையங்களில் அதாவது சிஇஎம்ஓஎன்சி மையங்களில், அதில் உள்ள எஸ்என்சியு மற்றும் பிஐசியு பிரிவுகளில், முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் ஸ்டாஃப் நர்ஸ் பணியிடங்களில் பணிபுரிய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி மொத்தம் 1695 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிக்கு மாதம் 21000 ரூபாய் ஒருங்கிணைந்த ஊதியமாக வழங்கப்படும் என்றும், விண்ணப்பிக்க விரும்புவோர் 50 வயது வரை இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் செவிலியர் கல்லூரிகளில் செவிலியர் பட்டய படிப்பு என்று சொல்லப்படும் ஜிஎன்எம் அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் என்று சொல்லப்படும் பிஎஸ்சி நர்சிங் படித்திருக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும் என்றும், தமிழ் மொழி அறிவு கட்டாயம் என்றும், அதற்கு எஸ்எஸ்எல்சி அல்லது எச்எஸ்சி மதிப்பெண் சான்றிதழ் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமான ஒப்பந்த அடிப்படையிலானவை என்பதால் பணி நிரந்தரம் கோர முடியாது என்றும், தேர்வு செய்யப்படுபவர்கள் அரசாணை எண் 427 மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத் துறை நாள் 18.11.2026 இன் படி பணியமர்த்தப்படுவார்கள் என்றும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. 

விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதற்குரிய ஆவண நகல்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட நலவாழ்வுச் சங்கம் அல்லது நகர நலவாழ்வுச் சங்க அலுவலகத்திற்கு வரும் 04.12.2026 அன்று மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும். விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட சுகாதார அலுவலர் அல்லது செயற் செயலாளர், மாவட்ட சுகாதார அலுவலகம் அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட நலவாழ்வுச் சங்கம் அல்லது நகர நலவாழ்வுச் சங்கம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் பிரிவிலும், பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவிலும், பிரசவ வார்டுகளிலும் பணியாற்றி, தாய் மற்றும் குழந்தையின் உயிரை காப்பாற்றும் புனிதமான பணிக்கு இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு என்பதால், தகுதி உள்ளவர்கள் யாரும் இந்த வாய்ப்பை தவறவிட்டு விட வேண்டாம் என்று தேசிய நலவாழ்வுக் குழுமத்தின் குழும இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.