1.66 கோடி பேர் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு - தேர்தல் ஆணையம் தகவல்..

தமிழகத்தில் 1.66 கோடி வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
ஒரு வாக்காளர் 2 வெவ்வேறு தொகுதிகளில் இடம்பெற்றிருப்பது, ஒரே தொகுதியில் 2 இடங்களில் இடம் பெற்றிருப்பது , ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்களிப்பது போன்றவை நடைபெறுகின்றன. இதுபோன்று கள்ள ஓட்டு போடுவதை தடுக்கும் வகையிலும், போலி வாக்காளர்களை அடையாளம் காணும் வகையிலும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் படி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி , வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கியது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று இந்தப்பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
வாக்காளர் அட்டை - ஆதார் எண் இணைப்பை எளிமையாக்க nvsp என்கிற இணையவசதியும், voter helpline 'மொபைல் ஆப்' வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் 'படிவம் - 6 பி'யை பூர்த்தி செய்தால், எளிதாக ஆதார் எண்ணை இணைத்து கொள்ளலாம். இந்நிலையில், இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்ததாவது, தமிழக வாக்காளர் பட்டியலுடன், ஆதார் எண்ணை 26.8 சதவீதம் வாக்காளர்கள் இணைத்துள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 1 முதல் இந்தப் பணி தொடங்கிய நிலையில், ஒரு மாதத்தில் அதாவது ஆகஸ்ட் 31 ம் தேதி வரை 26.78 சதவீதம் பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளார்கள். அதாவது தமிழ்நாட்டில் 6 கோடியே 21 லட்சத்து 72 ஆயிரத்து 922 வாக்காளர்கள் உள்ள நிலையில், மொத்த வாக்காளர்களில் 1 கோடியே 66 லட்சத்து 48 ஆயிரத்து 608 பேர் இணைப்பு பணியை செய்துள்ளதாக தெரிவித்தார்.