ரகசிய திருமணம் செய்து வாழ்ந்துவந்த சிறுமியை சீரழித்த சித்தப்பா!

 
abuse

திருப்பூரில் 16வயது சிறுமிக்கு பாலியல் அத்துமீறல் செய்த உறவினரையும், விசாரணையில் சிறுமிக்கு மணமானதை தெரிய வந்ததை தொடர்ந்து சிறுமியின் கணவரையும்  போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் - கணியாம்பூண்டியை சேர்ந்தவர் ஜான்சன். இவருக்கு 16 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் ஜான்சன் தனது மனைவி மற்றும் 16 வயது மகளை விட்டுவிட்டு சில வருடங்களுக்கு முன்னதாக வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிகிறது. இந்நிலையில் சிறுமியின் தாயார் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் 16 வயது சிறுமி பெற்றோரின் முறையான பராமரிப்பில்லாத காரணத்தால், படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். 

இந்நிலையில் சிறுமியின் வீட்டருகிலேயே வசித்து வந்த சிறுமியின் சித்தப்பா பிரகாஷ் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். சிறுமியின் முகத்தில் காயம் இருப்பதை கண்ட சிறுமியின் தாய், சிறுமியிடம் அதுகுறித்து கேட்ட பொழுது, பிரகாஷ் பாலியல் தொந்தரவு அளித்தது தெரிய வந்ததை தொடர்ந்து திருப்பூர் கொங்குநகர் (வடக்கு) அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்துள்ளார். புகாரினை பெற்ற போலீசார் சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில் சிறுமிக்கு ஏற்கனவே, சிறுமியுடன் பனியன் நிறுவனத்தில் பணி புரிந்த விஷ்ணுராம் என்பருடன் திருமணமானதும், தாயாரிடம் திருமணமானதை மறைத்து விஷ்ணுராமுடன் ரகசியமாக வாழ்ந்து வந்ததும் தெரிய வந்தது. 

இதனை தொடர்ந்து மகளிர் போலீசார் விஷ்ணுராம், பிரகாஷ் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர். போலீசார் கூறுகையில், சிறுமிக்கு பெற்றோரின் முறையான வழிகாட்டுதலும், கண்காணிப்பும் இல்லாத காரணத்தால் இதுபோன்ற செயல்கள் நிகழ்ந்துள்ளதாகவும், எனவே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை முறையாக கண்காணித்து வளர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.