வரலாற்றில் முதல்முறை... 16 லாரிகளில் மீண்டும் கேரளாவுக்கே அனுப்பப்படும் மருத்துவ கழிவுகள்!
தமிழக அரசு அதிக கவனம் செலுத்தி கேரளாவில் இருந்து நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட அனைத்து கழிவுகளையும்,கேரள அரசு மூலம் அகற்றப்பட்டு எடுத்துச் செல்லப்படுகின்றன என நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சுற்றுச்சூழலில் அதிக கவனம் செலுத்தி கேரளாவில் இருந்து நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட கழிவுகளை அகற்றுவதற்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவுப்படி கேரள அரசுடன் இணைந்து கழிவுகளை எடுத்து கேரளாவிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளது. மீண்டும் கேரளாவில் இருந்து கழிவுகள் இங்கு வராமல் இருப்பதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தென் மண்டல பசுமை தீர்ப்பாயமும் பல அறிவுரைகள் வழங்கும். அதன் அடிப்படையில் முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்தார். கேரளாவில் இருந்து நெல்லை மாவட்டத்தின் ஆறு இடங்களில் கொட்டப்பட்ட கேரள கழிவுகளை அகற்றும் பணிகள் தொடங்கியது.
இதற்காக கேரளா அரசு சார்பில் திருவனந்தபுரம் சார் ஆட்சியர் சாச்சி மற்றும் கேரள சுகாதாரத்துறை அலுவலர் கோபகுமார் உள்ளிட்டோர் தலைமையில் மூன்று துறைகளைச் சார்ந்த 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அர்பித் ஜெயன் மற்றும் பயிற்சி ஆட்சியர் அம்பிகா ஜெயன் ஆகியோர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக கேரளாவில் இருந்தும் சுமார் 16 டிப்பர் லாரிகள் கேரளா மாசு கட்டுப்பாடு துறை மூலம் கொண்டுவரப்பட்டு கழிவுகள் ஏற்றப்பட்டு அனுப்பப்படுகின்றன.
இதுவரை நெல்லை மாவட்டத்தில் கேரள கழிவுகள் கொட்டியதாக ஆறு வழக்குகள் சுத்தமல்லி, முன்னீர் பள்ளம், முக்கூடல், சீதப்பற்ப நல்லூர் காவல் நிலையங்களில் பதிவாகியுள்ளன. இது சம்பந்தமாக நெல்லை சுத்தம் மல்லியை சேர்ந்த மனோகர் ,மாயாண்டி ,சேலம் ஓமநல்லூரை சேர்ந்த செல்லத்துரை மற்றும் கேரள கழிவு மேலாண்மை அலுவலர் நிதின் ஜார்ஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை காவல்துறையின் தனிப்படையினர் பிடித்து விசாரணை நடத்திக் கொண்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் கேரளா கழிவுகள் கொட்டப்பட்ட ஆறு இடங்களில் தற்பொழுது கேரளா மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தலைமையில் இலந்தைகுளம் ,வேளார் குளம் ,கோடக் நல்லூர்,பழவூர்,கொண்டா நகரம், பாரதிநகர் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து கேரள கழிவுகளையும் அகற்றி கேரளாவுக்கு எடுத்துச் செல்லும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த கழிவுகள் அனைத்துமே கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட அனைத்து டிப்பர் லாரிகளிலும் ஏற்றப்பட்டு கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் என்றும் ,அங்கு இது கேரளாவில் மீண்டும் மக்கும் மற்றும் மக்காத கழிவுகளாக பிரிக்கப்பட்டு அங்குள்ள கழிவு மேலாண்மை கூடத்தில் வைத்து எரிக்கப்படும் எனவும் கேரள சுகாதாரத்துறை அலுவலர் கூறியுள்ளார்.
கேரளா அரசின் மூன்று துறைகளைச் சார்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருவதாகவும் இன்று மாலைக்குள் அனைத்து கழிவுகளும் கேரளாவிற்கு எடுத்துச் செல்லப்படும் என திருவனந்தபுரம் உதவி ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கேரள கழிவுகள் அனைத்தும் இங்கிருந்து அகற்றப்பட்டு கொட்டப்பட்ட இடங்களை தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என்றும் மேலும் கேரள கழிவுகளை கொண்டு வந்து இங்கு கொட்டியவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொண்டா நகரம் ஊராட்சி மன்ற தலைவி சொர்ணம் தெரிவித்தார்.