தென்பெண்ணை ஆற்றுப்படுகையில் 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்பு நாணயங்கள் கண்டெடுப்பு..!

 
1

பண்ருட்டி அருகே உள்ள உளுந்தாம்பட்டு மற்றும் தளவானூர் தென்பெண்ணையாற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறைப் பேராசிரியர் முனைவர் ரமேஷ் ஆகியோர் களஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பழங்காலச் செப்பு நாணயங்கள் இரண்டை அவர்கள் கண்டெடுத்தனர்.

அவற்றை ஆய்வுசெய்ததில் அவை 15ஆம் நூற்றாண்டு விஜயநகரக் காலத்தைச் சேர்ந்தவை எனத் தெரியவந்தது. நாணயத்தின் முன்பக்கத்தில் காளையின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது; பின்பக்கத்தில் ‘தேவராயர்’ என்று தெலுங்கில் எழுதப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் தென்பெண்ணை ஆற்றுப்படுகையில் செப்பு நாணயங்களும் தொல்பொருள்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்த ஆற்றங்கரைப் பகுதிகளில் சங்க காலம் முதல் விஜயநகர காலம் வரை பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் தடயங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன.

இதனால், தென்பெண்ணை ஆற்றுப் பகுதிகள் பழங்கால மக்களின் வாழ்விடமாகவும், வரலாற்றுச் சிறப்புமிக்க நகரங்களாகவும் இருந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.