150 நாள் வேலைவாய்ப்பு திட்டம்: தமிழக அரசு போட்ட திடீர் நிபந்தனை! யாருக்கெல்லாம் கிடைக்கும்?

 
govt

'விக்சித் பாரத்' வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார இயக்கத் திட்டத்தின் கீழ், 100 நாள் வேலை திட்டத்தை, மத்திய அரசு சமீபத்தில் 125 நாட்களாக அதிகரித்தது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் புதிதாக அமைந்த த.வெ.க., கூட்டணி அரசு, ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை, 150 நாட்களாக உயர்த்துவதாக அறிவித்தது. அதை செயல்படுத்த, தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை வெளியிட்ட அரசாணை:

மத்திய அரசின், 'விபி ஜி ராம்ஜி' திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்ட கிராமப்புறக் குடும்பங்களுக்கு, ஒரு நிதியாண்டுக்கு 125 நாட்கள் ஊதியத்துடன் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.

இந்த திட்டம், நடப்பாண்டில் ஜூலை 1- முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது.இத்திட்டத்திற்கான நிதியை மத்திய அரசும், மாநில அரசும் 60:40 என்ற விகிதத்தில் பகிர்ந்து வழங்குகின்றன.

இந்நிலையில், ஏற்கனவே 125 நாட்கள் வேலைவாய்ப்பை முழுமையாக பயன்படுத்திய தகுதியான குடும்பங்களுக்கு, மாநில அரசின் நிதியிலிருந்து கூடுதலாக, 25 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்க, தமிழக அரசு முடிவு செய்தது. இதன் மூலம், தகுதியுள்ள குடும்பங்கள் ஆண்டுக்கு மொத்தம், 150 நாட்கள் வேலைவாய்ப்பை பெற முடியும்.அதன்படி, 125 நாட்கள் வேலைவாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், பெண்களை தலைவராகக் கொண்ட குடும்பங்கள், தனியாக வசிக்கும் பெண்கள், மாற்றுத்திறனாளிகளை கொண்ட குடும்பங்கள், எஸ்.சி., - எஸ்.டி., பிற பாரம்பரிய வனவாசிகள் ஆகிய ஆறு பிரிவுகளைச் சேர்ந்த குடும்பங்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் கூடுதலாக, 25 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

இதற்காக, நடப்பு நிதியாண்டுக்கு, 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கூடுதலாக 25 நாட்கள் வேலைவாய்ப்பை பெற தகுதியுள்ள குடும்பங்கள் என, புதிய விதியை அரசு சேர்த்து இருக்கிறது. இதன் வாயிலாக, அரசாணையில் குறிப்பிட்டுள்ள ஆறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களை தவிர, பிறருக்கு கூடுதலாக 25 நாட்கள் வேலை கிடைக்காது என தெரிகிறது.

கூடுதல் 25 நாட்கள் வேலைவாய்ப்பைப் பெறத் தகுதியான அந்த 6 பிரிவினர் விவரம்:

பெண்களைத் தலைவராகக் கொண்ட குடும்பங்கள்

தனியாக வசிக்கும் பெண்கள்

மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட குடும்பங்கள்

பட்டியலினத்தவர் (SC)

பழங்குடியினர் (ST)

பிற பாரம்பரிய வனவாசிகள்

இவர்கள் 125 நாட்கள் வேலையை முழுமையாகப் பயன்படுத்தியிருந்தால் மட்டுமே, முன்னுரிமை அடிப்படையில் மாநில அரசின் நிதியிலிருந்து கூடுதலாக 25 நாட்கள் (மொத்தம் 150 நாட்கள்) வேலைவாய்ப்பைப் பெற முடியும்.