137 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல்- 2 காவலர்கள் பணியிட மாற்றம்
நாகை மாவட்டத்தில் மெத் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் நபர்களுடன் தொடர்பில் இருந்ததாக எழுந்துள்ள புகார்களைத் தொடர்ந்து, வேளாங்கண்ணி டிஎஸ்பியின் கார் ஓட்டுநர் சிவா மற்றும் வேளாங்கண்ணி காவல் நிலைய பெண் காவலர் சங்கீதா ஆகியோர் தஞ்சாவூருக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நாகை மாவட்டம் சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூபாலன், சுகன், மணிகண்டன், சதீஷ் ஆகிய நான்கு பேரை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு போலீசார் கைது செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில், மெத் போதைப்பொருளைக் கடத்துவதற்காகக் கார் வழங்கியதாகக் கூறப்படும் பிரதாபராமபுரத்தைச் சேர்ந்த ராஜ்குமாருக்கு இன்று காலை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சம்மன் வழங்கியுள்ளனர்.
இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகக் குறிப்பிடப்படும் பிரதாபராமபுரத்தைச் சேர்ந்த சுகனின் உறவினரும், அதே பகுதியைச் சேர்ந்தவருமான சிவா, வேளாங்கண்ணி டிஎஸ்பியின் கார் ஓட்டுநராகப் பணியாற்றி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், சுகன் ஒப்பந்த அடிப்படையில் நடத்தி வந்ததாகக் கூறப்படும் வேளாங்கண்ணி பகுதியில் உள்ள குயின்ஸ் பேலஸ் விடுதியில் கைப்பற்றப்பட்ட டைரியில், கார் ஓட்டுநர் சிவா மற்றும் பெண் காவலர் சங்கீதா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த டைரியில் உள்ள பதிவுகள் தொடர்பாக, இருவரும் கையூட்டு பெற்றதாக வருவாய் புலனாய்வுப் பிரிவு போலீசார் கண்டறிந்ததாகக் கூறப்படும் நிலையில், இருவரும் தஞ்சாவூருக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மெத் போதைப்பொருள் கடத்தல் வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், வேளாங்கண்ணி பகுதியைச் சேர்ந்த மேலும் சில காவல் அதிகாரிகளும் விசாரணை வளையத்திற்குள் வரக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், காவலர்கள் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் பணியிட மாற்றத்திற்கான அதிகாரப்பூர்வக் காரணங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறையினரின் உறுதிப்படுத்தல் கிடைத்த பின்னரே முழுமையான விவரங்களைத் தெரிவிக்க முடியும்.

