தமிழகம் முழுவதும் நாளை 12ம் வகுப்பு பொதுத்தேர்வு..

 
exam

தமிழகம் முழுவதும்  நாளை 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது.   நாளை முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை தேர்வு நடைபெறவுள்ளது.  

நடப்பாண்டு பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணையின் படி 12ம் வகுப்பு  மாணவர்களுக்கு மார்ச் 13 நாளை தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ந்தேதி வரை நடக்கிறது. 11ம் வகுப்புக்கு  14-ந்தேதி  முதல் ஏப்ரல் மாதம் 5-ந்தேதி வரையும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு  ஏப்ரல் 6-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது.  இந்தில் நாளை ( திங்கள் கிழமை) தொடங்கும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை  பள்ளி மற்றும் தனித்தேர்வர்களாக 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.  இதற்காக மாநிலம் முழுவதும்  3,225 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.   அறை கண்காணிப்பாளர்களாக 90 ஆயிரத்து 70 பேரும், பறக்கும் படை உறுப்பினர்களாக 3 ஆயிரத்து 100 பேரும், நிலையான படை உறுப்பினர்களாக 2 ஆயிரத்து 269 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  

மாணவர்கள்

தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடைபெற உள்ளது. இதில் முதல் 15 நிமிடங்கள் வினாத்தாள் வாசிக்க வழக்கப்படும். இந்த தேர்வை மாணவர்கள் எந்தவித அச்சமும், பதற்றமும் இல்லாமல் எழுத வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இந்நிலையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கும், கண்காணிப்பு ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.  தேர்வு அறைக்குள் செல்போன் உள்ளிட்ட மின் சாதனங்களை கொண்டு செல்லக் கூடாது என்றும்,  ஹால் டிக்கெட்டில் உள்ள விதிகளை மாணவர்கள் நிச்சயம் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற பேனாவால் மட்டுமே எழுத வேண்டும் என்றும்,  எக்காரணம் கொண்டும் கலர் பென்சில், பேனாவால் எழுத கூடாது. தவிர, விடைத்தாளில் சிறப்பு குறியீடு, தேர்வு எண், பெயர் ஆகியவற்றை குறிப்பிடக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  மாணவர் புகைப்படம், பதிவு எண், பாடம் முதலான விவரங்கள் கொண்ட முகப்புத்தாள், முதன்மை விடைத்தாளுடன் இணைத்து வழங்கப்படும். அதை சரிபார்த்து மாணவர்கள் கையொப்பமிட்டால் போதும் என்று கூறப்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் நாளை 12ம் வகுப்பு பொதுத்தேர்வு..

மேலும், அறை கண்காணிப்பாளரே விடைத்தாள்களை பிரித்து வைக்க வேண்டும்,  தேர்வெழுத இருக்கும் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் சிறப்பு அறிவுரைகளுடன் அச்சிடப்பட்டு இருப்பதாகவும்  அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இதற்கு முன்பாக  வினாத்தாள், விடைத்தாள்களில் அச்சிடப்படும் இந்த அறிவுரைகள்  இம்முறை  தேர்வுக்கு முன்னதாகவே ஹால் டிக்கெட்டில் அச்சிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

மாணவர்களும், ஆசிரியர்களும் தேர்வு அறைகளில் செல்போன் எடுத்துவர அனுமதி கிடையாது என்பதால், இந்த அறிவுரையை மீறி தேர்வர்களோ, ஆசிரியர்களோ செல்போன் மற்றும் இதர தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பது கண்டறியப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,  தேர்வில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.   பொதுத்தேர்வு குறித்த சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க வசதியாக, தேர்வு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாகவும், தேர்வு காலங்களில் காலை 8 முதல் இரவு 8 மணி வரை இந்த அறை செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.  9498383081, 9498383075 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு, உரிய விளக்கம் பெறலாம் என்று தேர்வு துறை அறிவித்துள்ளது.