+2 பொதுத்தேர்வு மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் குறித்த அறிவிப்பு வெளியானது

 
school

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

2022- 23 கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான கால அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கடந்த நவம்பர் மாதம் 07ம் தேதி வெளியிட்டார். அதன்படி, மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுகிறது. நடப்பாண்டுக்கான, 12ம் வகுப்பு பொது தேர்வை சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இதனையொட்டி அடுத்த மாதம் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. இதனிடையே 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் கடந்த 04ம் தேதி வெளியானது.  

இந்நிலையில், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அடங்கிய பாடத்திற்கு 225 ரூபாயும், செய்முறை அல்லாத பாடங்களுக்கு 175 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 11 ம் வகுப்பு அரியர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரு பாடத்திற்கு 50 ரூபாய் எனவும் இதர கட்டணம் 35 ரூபாயும் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 06.01.2023 மதியம் முதல் 20.01.2023 மாலை 5 மணிக்குள் மாணவர்களிடமிருந்து தேர்வு கட்டணத்தை பெற்று https://www.dge1.tn.gov.in தேர்வுகள் துறை இணையதளத்தில் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.