122 ஆண்டுகளில் இல்லாத மழை - குட்டி தீவாக மாறிய சீர்காழி : முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

 
s

வரலாறு காணாத கனமழையினால் குட்டி தீவாக மாறி வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சீர்காழி பகுதியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்கிறார்.  நேற்று வடசென்னைப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டபோது, பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கவில்லை என மக்கள் தெரிவித்தனர்.  இன்னும் சில இடங்களில் எஞ்சியுள்ள பணிகளை விரைந்து நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் முதல்வர். 

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையினால் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.  குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழியில் மட்டும் 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஆறு மணி நேரத்தில் 44 செண்டி மீட்டர் மழை கொட்டி தீர்த்து இருக்கிறது.  இந்த வரலாறு காணாத பழகினால் திரும்பிய திசை எல்லாம் வெள்ளைக்காடாக காட்சி அளிக்கிறது. 

s

 குட்டி தீவு போல மாறி இருக்கிறது  சீர்காழியும் அதனை சுற்றியுள்ள 32 கிராமங்களும்.   இதனால்  அப்பகுதிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.  சீர்காழியின் சட்டநாதர் கோவில், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில், தையல்நாயகி அம்மன் கோவில் உள்ளிட்ட பல கோயில்களில் மழை நீர் புகுந்து விட்டது . இதனால் சீர்காழியில் மட்டும் ஒன்பது நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. 

 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 7,156 குடும்பங்களைச் சேர்ந்த 16 ஆயிரத்து 577 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.  கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழையினால் அதிகம் பதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்கிறார்.

 இது குறித்து முதல்வர் தனது டுவிட்டர் பதிவில் ,  ‘’வடசென்னைப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டபோது, பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கவில்லை என மக்கள் தெரிவித்தனர்.  இன்னும் சில இடங்களில் எஞ்சியுள்ள பணிகளை விரைந்து நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இன்று  சீர்காழியில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கிறேன்’’ என்று கூறி இருக்கிறார்.