புழல் சிறையில் 120 கைதிகள் ஒரே கழிப்பறையை பயன்படுத்துகிறோம் - அமர் பிரசாத் ரெட்டி
சென்னை புழல் சிறையில் 120 கைதிகள் ஒரே கழிப்பறையை பயன்படுத்துவதாக உயர்நீதிமன்றத்தில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜகவின் மாநில இளைஞர் விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவின் தலைவராக இருப்பவர் அமர் பிரசாத் ரெட்டி. கடந்த 21-10-2023 அன்று செங்கல்பட்டு மாவட்டம் பனையூரில் உள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டில் இருந்த கொடிக்கம்பத்தை அகற்றிய போது ஜேசிபி இயந்திரத்தின் கண்ணாடியை உடைத்ததாக கானத்தூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் அமர் பிரசாத் ரெட்டி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், “சென்னை புழல் சிறையில் கைதிகளுக்கான அடிப்படை வசதிகளில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. 2,000 விசாரணை கைதிகளை அடைக்க வேண்டிய இடத்தில் 2,910 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். 500 பேருக்கு ஒடு சமையல் அறை என்று இல்லாமல் 2,910 பேருக்கும் ஒரே ஒரு சமையலறை உள்ளது. 10 கைதிகளுக்கு ஒரு கழிப்பறை என்ற விதியை மீறி 120 கைதிகள் ஒரே கழிப்பறையை பயன்படுத்திவருகிறோம். என்னை அரசியலில் இருந்து வெளியேற வேண்டும் என முன்னாள் உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் மற்றும் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் மிரட்டுகிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜாமீன் கோரி அமர்பிரசாத் ரெட்டி தாக்கல் செய்த மனு காவல்துறையின் கோரிக்கையை ஏற்று வழக்கு விசாரணையை நவம்பர் 10 ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் ஒத்திவைத்தார்.