இப்படி கூட சாவு வருமா? தடுக்கி விழுந்து 12ஆம் வகுப்பு மாணவன் பலி

 
ச்

நாகையில் மாதிரி பள்ளியில் தங்கி பயின்ற 12ஆம் வகுப்பு மாணவன் தடுக்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நாகை அடுத்த நாகூர் காட்டுநாயக்கன் தெரு பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன்- ரேவதி தம்பதியினரின் மகன் சஞ்சய் ராமசாமி. இவர் நாகையில் உள்ள வலிவலம் தேசிகர் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் செயல்படும் அரசு மாதிரி பள்ளியில் விடுதியில் தங்கி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சஞ்சய் ராமசாமியின் தந்தைக்கு விடுதி வார்டன் உங்களது மகன் விடுதியில் மயங்கி விழுந்து விட்டதாகவும், நாகை அரசு மருத்துவமனைக்கு உடனடியாக வரவேண்டும் எனவும் போன் செய்துள்ளார். இதனிடையே மருத்துவமனைக்கு சென்று ராமச்சந்திரன் பார்த்தபோது அவருடைய மகன் சஞ்சய் ராமசாமி சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

அதனைத் தொடர்ந்து நாகை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் குவிந்து மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கண்ணீர் விட்டு கதறி அழுதனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் காவல் ஆய்வாளர் சிங்காரவேலன் தலைமையிலான போலீசார் மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து உயிரிழந்த மாணவனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். விடுதியில் இருந்த மாணவர் சஞ்சய் ராமசாமி தடுக்கி விழுந்ததில் உயிரிழந்ததாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே தன்னுடைய மகனுக்கு உடல் ரீதியாக எந்த பிரச்சினையும் இல்லை என்று வேதனையுடன் கூறியுள்ள மாணவனின் தாய் ரேவதி, மகன் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் மருத்துவமனையில் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார். நாகையில் மாதிரி பள்ளி மாணவர் விடுதியில் தடுக்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.