தமிழ்நாடு முழுவதும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது

 
test

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று  காலை 10 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறுகிறது.  12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று மொழிப் பாடத் தேர்வு(தமிழ்) நடைபெறுகிறது. 3,119 தேர்வு மையங்களில் 3 லட்சத்து 98 ஆயிரத்து 321  மாணவர்கள், 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 மாணவிகள் என மொத்தம் 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். மேலும் தனித்தேர்வர்கள் 28,353 பேரும், மாற்றுத்திறனாளிகள் 3,638 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 6 பேரும், சிறைக்கைதிகள் 73 பேரும் தேர்வை எழுதுகின்றனர். தேர்வு காரணமாக மாணவர்கள் காலை 9.45 மணிக்குள் தேர்வறையில் இருக்க வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவித்திருந்தது.

exam

பொதுத்தேர்வு எழுதும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் காலை 9.45 மணிக்கு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.  காலை 10 மணி முதல் 10.10 மணி வரை மாணவர்கள் வினாத்தாளை படிக்க அனுமதி வழங்கப்பட்டது. பிற்பகல் 1.10 மணிக்கு எச்சரிக்கை மணி அடிக்கப்படும் போது விடைத்தாள்களை நூல் கொண்டு கட்டவேண்டும் என்றும் பிற்பகல் 1.15 மணிக்கு தேர்வு நிறைவு பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடுவது தடுக்க ஒரு தேர்வு மையத்திற்கு மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 2 முதல் 4 பேர் வரை நிரந்தரமாக கண்காணிக்க 250 நிரந்தர உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வில் முறைகேடு நடைபெறாமல் தடுப்பதற்காக 1000 பறக்கும் படைகள் மற்றும் நிலையான பறக்கும் படைகள் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதனிடையே நாளை 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடங்குகிறது.