நாமக்கல்லில் கடத்தப்பட்ட 11 வயது சிறுமி மீட்பு!!

 
tn

நாமக்கல் அருகே வீட்டில் தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த போது கடத்தப்பட்ட சிறுமி மீட்கப்பட்டுள்ளார். 

நாமக்கல்லில் வீட்டு மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்த 11 வயது சிறுமி மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.  நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே புதுக்கோட்டை ஊராட்சி காளிசெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சரவணன் - கௌசல்யா தம்பதியின் மகள் மவுலீசா புதுப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.  இவரின் தந்தை சரவணன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பே வேலை விஷயமாக வெளியூர் சென்று உள்ளார்.  இந்த சூழலில் நேற்று முன்தினம் இரவு கௌசல்யா, மகன்  ஜோனின் மற்றும் மகள்  மவுலீசா ஆகிய 3 பேரும் வீட்டு மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டு இருந்துள்ளனர்.  அப்போது சுமார் 2 மணி அளவில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் மொட்டை மாடிக்கு  ஏறி வந்து தூங்கிக்கொண்டிருந்த கௌசல்யாவை எழுப்பி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி உள்ளனர்.  அத்துடன் ஜோனின் வாய்களில் பிளாஸ்டிக் பேண்டேஜ் ஒட்டி,  இரண்டு கைகளையும் கட்டி போட்டுவிட்டு மகளை கொன்று விடுவதாக மிரட்டியுள்ளனர்.

ttn

இதைதொடர்ந்து சிறுமியை அங்கிருந்தவர்கள் கடத்தி சென்றதாக தெரிகிறது.  கௌசல்யா அணிந்திருந்த 3 பவுன் நகை , வெள்ளி கொலுசு ஆகியவற்றையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர் . இதுகுறித்து உடனடியாக அக்கம்பக்கத்தினர் தெரியவர எருமப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  இதையடுத்து வீட்டு மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை கடத்திய மர்ம நபர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.  அத்துடன் அங்கிருந்த கைரேகையை தடயங்களும் சேகரிக்கப்பட்டது.

 சிறுமியை கடத்திய மர்ம நபர்கள் கௌசல்யா வைத்திருந்த செல்போனில் இருந்த சிம் கார்டை எடுத்து சென்றதாக தெரிகிறது.  நேற்று காலை 11 மணியளவில் வீட்டின் உரிமையாளரான முருகேசனுக்கு கௌசல்யாவின் எண்ணிலிருந்து போன் வந்துள்ளது.  அப்போது போனில் பேசிய மர்ம நபர்கள் சிறுமி உயிருடன் வேண்டும் என்றால் ரூ.50 லட்சம் தரவேண்டும் என்று மிரட்டியுள்ளனர்.

ttn
இந்நிலையில் சிறுமியை கடத்திய மர்ம நபர்களை தனிப்படை போலீசார் கைது செய்து சிறுமியை பத்திரமாக மீட்டுள்ளனர். சிறுமியை கடத்தியதாக உறவினர்கள் மணிகண்டன், பொன்னுமணி தம்பதியை காவல்துறை கைது செய்து   விசாரித்து வருகின்றனர்.  கடத்தப்பட்ட சிறுமி அலங்காந்தம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் பகுதியில் விட்டு விட்டு சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் சிறுமியின் தந்தை சரவணனை பழிவாங்க சிறுமி கடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் போலீசார் தெரிவித்துள்ளனர்.