புழல் அருகே தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவன் தற்கொலை

 
suicide

புழல் அருகே பிளஸ் ஒன் தேர்வில் தோல்வியடைந்ததால் மன உளைச்சலில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை புழல் அடுத்த புத்தகரம் அன்னை இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (16). இவர் வில்லிவாக்கம் சிட்கோ நகரில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் 3 பாடங்களில் கார்த்திக் தோல்வியடைந்தார். இதனால் கார்த்திக் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில் இன்று காலை கார்த்திக்கின் பெற்றோர் வழக்கம் போல எலுமிச்சை வியாபாரத்திற்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் படுக்கையறையில் கார்த்திக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து புழல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கார்த்திக்கின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனை‌க்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிளஸ் ஒன் தேர்வில் தோல்வியடைந்ததால் மன உளைச்சலில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.