"11 மாசம் கட்டுனா 12-வது மாசம் இலவசம்!" – பெண்களைக் கவர கோ-ஆப்டெக்ஸ் கொண்டுவந்த மெகா திட்டம்!
தமிழ்நாடு அரசின் மாபெரும் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 91 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் வாயிலாக சந்தைப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸின் அனைத்து விற்பனையகங்களிலும் சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது. 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் காஞ்சிபுரம், சேலம், கோவை மென்பட்டு சேலைகள், ஆரணி மற்றும் தஞ்சை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுச் சேலைகள் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றிற்குக் கிடைத்து வரும் வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே தீபாவளி 2026 சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தீபாவளி 2026 பண்டிகையையொட்டி இந்த முறை விற்பனைக்காக புதிய இரகங்களான பிரிண்டட் சட்டைகள், பிரிண்டட் குர்த்தீஸ்கள், பாலிரயான் எம்ப்ராய்டரி குர்த்தி, ஸ்ட்ரெய்ட் பேண்ட், சக்கராபேண்ட் வித் கிராப் டாப், பலாசோபேண்ட் வித் கிராப் டாப் செட், தோத்தி பேண்ட் வித் கிராப் டாப், காட்டன் ஸ்லப் பிரிண்டட் குர்த்தீஸ், காட்டன் ஸ்லப் கலம்கரி குர்த்தீஸ் ஆகியவை குவிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து, சிறுமிகளுக்கான பட்டு பாவாடை சட்டை இரகங்கள், புதிய வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புகளில் உருவாக்கப்பட்ட காட்டன் ஆடவர்களுக்கான லினன், ரிங்க்கிள் சேலைகள், நைட்டிகள், ஸ்லிம்ஃபிட் ரெடிமேட் சட்டைகள் ஆகியவையும் ஏராளமாக வரவழைக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
மாத சந்தா திட்டத்தையும் கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகம் தற்போது தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர்களுக்கு மொத்தமுள்ள 12 மாதங்களில் 12 ஆவது மாதத்துக்கான தவனை தொகையை கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகமே செலுத்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரூ. 300 முதல் ரூ. 3,000 வரை என மொத்தம் 12 மாத சந்தா திட்டங்களை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது. வாடிக்கையாளர்கள் தொடர்ந்து 11 மாதம் பணம் செலுத்தி 12 ஆவது மாதத்தில் செலுத்திய மொத்த தொகைக்கான மதிப்பில் விருப்பப்பட்ட ஆடையை வாங்கிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.


