11 மாத பெண் குழந்தை ரூ.1 லட்சத்திற்கு விற்பனை!
வறுமையை காரணம் காட்டி பெற்ற குழந்தையை தாயே விற்பனை செய்த சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஆவூர் பகுதியை சேர்ந்தவர் சுகந்தி. இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய கணவர் இறந்து விட்டார் இவருடைய மூத்த மகள் பத்தாம் வகுப்பு படிக்கிறார், மகன் மூன்றாம் வகுப்பு படிக்கிறார். கணவர் இறந்த பிறகு தவறான தொடர்பால் குழந்தை ஒன்று பிறந்துள்ளது அந்த குழந்தை பிறந்து 11 மாதம் ஆகிறது.
இந்த நிலையில் இவர் வாடகைக்கு வசிக்கக்கூடிய வீட்டின் உரிமையாளர் சமீனா பானு என்பவர் இவரது வறுமையை காரணம் காட்டி குழந்தையை விற்று விடலாம் என கூறியுள்ளார், அதன்படி ரூ 1 லட்சத்திற்கு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா நாச்சியார் கோவில் பகுதியைச் சேர்ந்த ஆயிஷா நஷிமா என்பவரிடம் சுகந்தி குழந்தையை விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. சுகந்தி ஆவூர் பகுதியில் குழந்தை இல்லாமல் இருந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர், சைல்டு ஹெல்ப் லைன் 1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார்கள். அதன்படி திருவாரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உத்தரவின் பேரில் திருவாரூர் மாவட்ட குழந்தைகள் உதவி மைய பணியாளர்கள் விசாரணை செய்து ஆயிஷா நஷிமா என்பவரிடம் இருந்து குழந்தையை மீட்டு உள்ளார்கள்.

அதன் பிறகு தற்போது குழந்தையும் அவருடைய தாய் சுகந்தியும் திருவாரூரில் உள்ள அரசு காப்பகத்தில் உள்ளார்கள் சம்பவம் குறித்து திருவாரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வலங்கைமான் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட மூன்று பெண்கள் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். குழந்தை வாங்கிய ஆயிஷா நஷிமா, குழந்தையை விற்க சொன்ன வீட்டின் உரிமையாளர் சமீனா பானு ஆகியோரை வலங்கைமான் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


