குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவில் நடந்த துயரம்! மேற்கூரை இடிந்து 11 மாதக் குழந்தை பலி
தூத்துக்குடியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 11 மாத கைக்குழந்தை தலை சிதறி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி சின்ன கண்ணுபுரம் பகுதியில் உள்ள செல்வ விநாயகர் புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன், ஆட்டோ ஒட்டி வருகிறார், இவரது மகள் சிவரஞ்சனி, சிவரஞ்சனிக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்று தற்போது குழந்தை பிறந்துள்ளதால் தனது தந்தை ஜெகன் வீட்டில் வசித்து வந்துள்ளார், இன்று சிவரஞ்சனிக்கு பிறந்த ஒரு மாத குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சி ஜெகன் வீட்டில் வைத்து நடைபெற்று வந்தது.ஜெகன் வீட்டின் எதிரே வசித்து வருபவர் ஆனந்த் மற்றும் ராதா மகேஸ்வரி தம்பதிகள் ஆனந்த் கார் டிரைவர் ஆக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகன் மற்றும் 11 மாத குழந்தை ஆதிரா ஆகியோருடன் வசித்து வருகின்றனர்.

ஆனந்த் கார் ஓட்டுவதற்காக வேலைக்கு சென்ற நிலையில்ம் மகன் பள்ளிக்கு சென்று உள்ளார். ராதா மகேஸ்வரி மற்றும் 11 மாத குழந்தை ஆதிரா ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர். இந்த நிலையில் இன்று பிற்பகல் ஒரு மணி அளவில் எதிரே உள்ள சிவரஞ்சனி வீட்டில் நடைபெறும் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ராதா மகேஸ்வரி தனது 11 மாத கைக்குழந்தை ஆதிராவுடன் சென்றுள்ளார். அங்கே ஜெகன் வீட்டில் ராதா மகேஸ்வரி 11 மாத பெண் குழந்தை ஆதிரா மற்றும் சிவரஞ்சனி மற்றும் நிகழ்ச்சிக்கு வந்த 10 பேர் இருந்துள்ளனர். அப்போது வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து கீழே விழுந்துள்ளது. இதில் கீழே தரையில் இருந்த 11 மாத கைக்குழந்தை ஆதிரா மேற்கூரை விழுந்ததில் தலை சிதறி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியானது. இதில் வீட்டில் நின்று கொண்டிருந்த ராதா மகேஸ்வரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தலையில் காயம் அடைந்த ராதா மகேஸ்வரியை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் வீட்டிலிருந்த சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் சிறிய காயங்களுடன் உயிர்த்தப்பினர். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

