தவெகவில் இணைந்த 11 அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு முக்கியப் பொறுப்பு! விஜய் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

 
1

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த அதிமுக நிர்வாகிகளுக்கு புதிய பொறுப்புகளை கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான விஜய் வழங்கி வருகிறார். அந்த வகையில்,11 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்பட 15 பேருக்கு தவெகவில் துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழக வெற்றிக் கழகத்தின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் முன்னாள் அமைச்சர்கள் எம்.எஸ்.எம்.ஆனந்தன், எம்.சி.சம்பத், உடுமலை கே.ராதாகிருஷ்ணன், ராமலிங்கம், எம்.ஆனந்தன், கடம்பூர் ராஜு, பச்சைமால், வெல்லமண்டி என்.நடராஜன், சிவபதி, வைகைச்செல்வன், எஸ்.வளர்மதி மற்றும் டாக்டர்.சந்தீப் ஆனந்த், முத்து வெங்கடேஸ்வரன், தொள்ளமூர் கண்ணன், குமரன் ஆகியோர் துணைப் பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதியை உள்ளடக்கிய திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டக் கழகம் உருவாக்கப்பட்டு அதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சி.மகேந்திரன் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். தவெகவின் ஆக்கப்பூர்வப் பணிகள் குறித்து எனது உத்தரவு மற்றும் ஆலோசனையின்படியும், பொதுச்செயலாளர் என்.ஆனந்த்தின் வழிகாட்டுதலின்படியும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுடன் இணைந்து இந்தப் புதிய நிர்வாகிகள், பணிகளை மேற்கொள்வார்கள். தவெக தொண்டர்கள், இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாராபுரம் (தனி), மதுராந்தகம் (தனி) ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்.06- ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அந்த தொகுதிகளில் வெற்றி பெறும் முனைப்பில் தவெக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், தவெகவில் இணைந்த அதிமுக நிர்வாகிகளுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.