விருத்தாசலம் அருகே பள்ளத்தில் விழுந்து 10 வயது சிறுவன் உயிரிழப்பு

 
Death

விருத்தாசலம் அருகே பேருந்து நிழற்குடை அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் சிறுவன் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

விருத்தாசலம்: பள்ளத்தில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலி

கடலூர் மாவட்டம் விருத்தாசலம்-உளுந்தூர்பேட்ட சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி சாலையில் பேருந்து நிழற்குடை அமைக்கும் பணியும் ஒருபுறம் நடைபெறுகிறது. அந்த வகையில் விஜயமாநகரம் பேருந்து நிழற்குடை அமைக்க பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழையினால் பெய்துவரும் மழையால் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நின்றுள்ளது. இதையறியாத விஜயமாநகரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயமூர்த்தி மகன் வினோத்குமார்(10) என்பவர் சாலையோரம் நடந்து வந்தபோது, தவறி பள்ளத்தில் விழுந்து நீரில் மூழ்கியுள்ளார். 

இதையறிந்த அவரது பெற்றோர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனை பார்த்தபோது, அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.  இதையடுத்து சிறுவனின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் மாநில நெடுஞ்சாலைத் துறையினரைக் கண்டித்து விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை சாலை மார்க்கத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த மங்கலம்பேட்டை போலீஸார், சம்பவ இடத்திற்குச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசி வருகின்றனர்.