கரூரில் சோகம்! பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை

 
Karur

கரூர் மாவட்டம் சின்னமலைபட்டியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்.6 முதல் 20-ம் தேதி வரை நடத்தப்பட்ட நிலையில்  பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் 91.39% பேர் தேர்ச்சி அடைந்துள்ள நிலையில் மாணவர்களை விட மாணவியர் 6.50 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பில் மாணவியர்கள் 4,30,710 பேரும் மாணவர்கள் 4 லட்சத்து 4 ஆயிரத்து 904 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.66%, மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.16% ஆகவும் பதிவாகியுள்ளது.
 
இந்நிலையில், கரூர் மாவட்டம் சின்னமலைபட்டியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கூலித்தொழி தம்பதி வீரமணி என்பவரின் மகன் சிவா அருகிலுள்ள பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தான். இவன் தமிழ் மற்றும் கணிதப் பாடங்களில் தோல்வி அடைந்துள்ளார். இந்த நிலையில் தோல்வியடைந்த விரக்தியில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்கிட்டு சிவா தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.