10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

 
Student

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்.6 முதல் 20-ம் தேதி வரை நடத்தப்பட்ட நிலையில்  பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இந்த தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in இணையதள முகவரிகள் மூலம் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்து இருந்தது.  இதில்   91.39% பேர் தேர்ச்சி அடைந்துள்ள நிலையில்  மாணவர்களை விட மாணவியர் 6.50 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பில் மாணவியர்கள் 4,30,710 பேரும் மாணவர்கள் 4 லட்சத்து 4 ஆயிரத்து 904 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.66%, மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.16% ஆகவும் பதிவாகியுள்ளது.
 
இந்த நிலையில், காரைக்காலில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் மாவட்டம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ஓட்டுநர் ஐயப்பன் என்பவரது மகன் ராகவன் தேர்வில் தோல்வி அடைந்துள்ளார். இதன் காரணமாக மன அழுத்தத்தில் இருந்த மாணவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். போலீசார் மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.