கனியாமூர் கலவரம் : கைதான 108 பேருக்கு மேலும் 15 நாட்கள் காவல்.. - நீதிபதி உத்தரவு..

 
kallakurichi kallakurichi

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் கலவரத்தில் ஈடுபட்ட 108 பேருக்கு, இரண்டாவது முறையாக 15 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.  

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூரில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் +2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.  பள்ளியின் விடுதியில் தங்கி அவர் படித்து வந்த  அவர்,  திடீரென  3வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.  இதையடுத்து,  மாணவியின் உறவினர்கள் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மாதம் 17 ஆம் தேதி   ஏராளமான  இளைஞர்களும், அப்பகுதி மக்களும் பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 கள்ளக்குறிச்சி வன்முறை

பின்னர் அந்தப் போராட்டம்  கலவரமாக மாறியது.  போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் 20க்கும் மேற்பட்ட பள்ளி பேருந்துகளை தீ வைத்து எரித்தனர்.  வகுப்பறைகள், அலுவலக அறைகள் என அனைத்தையும் சூறையாடிய போராட்டக்காரர்கள், நாற்காலிகள் மேசைகளை அடித்து நொறுக்கினர். இதில்  பள்ளியில் பயின்ற 4,500 மாணவர்களின் சான்றிதழ்களும் எரித்து சாம்பலாக்கப்பட்டன.  பின்னர் உளவுத்துறை நடத்திய விசாரணையில், வாட்ஸப் குழுக்கள் மூலம் போராட்டக்காரகள் ஒன்று திரண்டதாகவும், இதில் சிலர் வேண்டுமென்றே வன்முறையில் ஈடுபட்டதும் தெரிவிக்கப்பட்டது.   இதனையடுத்து  கலவரத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபி சைலேந்திரபாபு  உத்தரவிட்டார்.

கள்ளக்குறிச்சி பள்ளி

இதனை தொடர்ந்து, வீடியோ பதிவுகள், சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து  இந்த கலவரம் தொடர்பாக 300-க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்தனர். கைது நடவடிக்கையும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.   இந்த வழக்கை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்நிலையில் கலவர வழக்கில் 300-க்கும் மேற்பட்டர் கைதான  நிலையில் அவர்களில் 72 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் இன்று மீதமுள்ளவர்களில்  108 பேர்  வீடியோ கான்பரன்ஸ் மூலம்,  கள்ளக்குறிச்சி இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முகமது அலி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களுக்கு 2வது முறையாக  மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து, நீதிபதி உத்தரவிட்டார்.