#BREAKING சென்னைவாசிகளுக்கு ஜாக்பாட்! 1,000 புதிய AC மின்சார பேருந்துகள் கொள்முதல்

 
vuhat

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக 1,000 AC வசதி கொண்ட மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்ய முதலமைச்சர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். 


இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மாநகரில் பொதுமக்களுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த, பாதுகாப்பான மற்றும் வசதியான பொதுப் போக்குவரத்து சேவையை வழங்கும் வகையில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 1,000 புதிய குளிர்சாதன வசதி கொண்ட மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்திடவும், பேருந்துப் பணிமனைகளில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திட ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சென்னையில் தற்போது 755 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 355 பேருந்துகள் குளிர்சாதன வசதி கொண்டவையாகும். தமிழ்நாடு மாநில அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வாகனத் தொகுப்பை நவீனமயமாக்கும் நோக்கிலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்திடும் விதமாகவும் நடப்பு நிதியாண்டில் சென்னை மாநகர் (Gross Cost Contract) முறையின் கீழ், 1,000 புதிய குளிர்சாதன வசதி கொண்ட மின்சாரப் பேருந்துகளைக் கொள்முதல் செய்திடவும், இப்பேருந்துகளை இயக்குவதற்குத் தேவையான மின்சாரம் மற்றும் இயந்திரவியல் சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகளைப் பேருந்துப் பணிமனைகளில் ஏற்படுத்துவதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

இதன்மூலம் சென்னையின் பொதுப் போக்குவரத்து சேவை நவீனமயமாக்கப்படுவதுடன், சுற்றுச்சூழல் மாசு குறைக்கப்பட்டு, பயணிகளுக்கு மேம்பட்ட மற்றும் வசதியான போக்குவரத்து சேவை கிடைக்க வழிவகை ஏற்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.