காணாமல் போன கட்சிக்கு 10 சீட், கிளை இல்லாத கட்சிக்கு 8 சீட்... எங்களுக்கு? - திமுக-வை வெளுத்து வாங்கிய வைகோ!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடந்த கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசினார்.
அவர் பேசியதாவது: முதல்வர் விஜய் என் வீட்டிற்கு வருவார் என கனவில் கூட நினைக்கவில்லை. ஆச்சரியப்பட்டேன். எனக்கு பெரிய பதவி கிடையாது. பெரிய கட்சியும் இல்லை. கட்சியில் என்னை விட்டு பிரிந்து சென்றவர்கள் அதிகம். முதல்வர் விஜய்யிடம் நான் ரூ.50 கோடி வாங்கியதாக பேசுகின்றனர். மக்களின் வாழ்வாதாரங்களை காப்பாற்ற நாங்கள் போராடியதை போல எந்த கட்சி போராடியது.முல்லைப்பெரியாறை காக்க 11 ஆண்டுகள் போராடியவன் நான். எந்த கட்சி நடைப்பயணம் நடத்தியது.
நானும் மகன் துரையும் லட்சக்கணக்கான கோடிகள் சம்பாதித்தாகவும், அண்ணாசாலையில் அடுக்கு மாளிகை மகன் வைத்திருப்பதாகவும் பேசுகின்றனர்.கடந்த ஏழு மாதங்களாக இப்படி ஒருவர் பேசி வருகிறார். அவர் யார், அவரை பேச வைத்த சக்தி எது, பின்னால் இருந்து யார் இயக்குகின்றனர் என்பதை 32 ஆண்டுகளாக அரசியல்வாதி இருக்கும் எனக்கு யூகிக்க முடியாதா. மக்களிடம் சொல்கிறேன். நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள்.நான் இருக்கும் இடத்திற்கு விசுவாசமாக இருந்திருக்கிறேன். கனவிலும் வஞ்சகம் நினைத்தது இல்லை. எங்களை விட வலு குறைந்த கட்சிகளுக்கு அதிக இடங்கள், எங்கள் கட்சியில் ஊருக்கு 10 பேராவது இருக்கின்றனர். கிளைகள் கூட இல்லாத கட்சிக்கு 8 இடங்கள். காணாமல் போகும் நிலையில் இருந்த கட்சிக்கு 10 இடங்களுடன் ராஜ்ய சபா சீட்டு. எங்களுக்கு அவை கிடைக்கவில்லை. அதுகுறித்து நாங்கள் கவலைப்படவில்லை.
இந்த 9 ஆண்டில் தி.மு.க.,வை ஒரு சொல் தவறாக சொன்னது உண்டா. உங்களோடு இருந்த கட்சிகள் உங்களை விமர்சித்தன. அது உங்களுக்கு தவறாக படவில்லை. பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து அ.தி.மு.க.,வை அமைச்சரவை ஏற்ற முடிவு செய்த நீங்கள் எங்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும். இப்படிப்பட்ட விபரீத முடிவுக்கு வருவர் என எதிர்பார்க்கவில்லை. இது அரசியல் மோசடி என பேசினார்.

