பாய்லர் வெடித்து 10 பேர் உயிரிழப்பு; 15 பேர் காயம்..!

 
1

வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான மின்னுற்பத்தி நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 15 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சக்தி மாவட்டத்தில் உள்ள சிங்கிதராய் என்ற இடத்தில் வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான மின்னுற்பத்தி நிலையம் இயங்கி வருகிறது. அங்கு இன்று மதியம் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பாய்லர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தொழிலாளர்கள் பீதியடைந்து நாலாபுறமும் ஓடினர். உடனடியாக அனைத்துத் தொழிலாளர்களும் வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் காவல் துறை, தீயணைப்புத் துறை, உள்ளூர் நிர்வாகம் மற்றும் மின்சாரத் துறை அதிகாரிகள் உடனடியாக அங்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்த தொழிலாளர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வேதாந்தா மின்னுற்பத்தி நிலையத்தில் பாய்லர் வெடித்து 10 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தேவ் சாய் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வேதாந்தா மின் நிலையத்தில், பாய்லர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டிருப்பது மிகுந்த வேதனையை தருகிறது. இந்த விபத்தில் பல தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதற்கிடையே, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் அரசும், மின்னுற்பத்தி நிலைய நிர்வாகமும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகல் வலியுறுத்தி உள்ளார். காயமடைந்த தொழிலாளர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.