சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச சென்ற 10 பேர் கைது!
Feb 25, 2025, 13:33 IST1740470593796

பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச சென்ற 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலின் போது பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். இது தமிழக அரசியல் கட்சிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பல்வேறு காவல் நிலையங்களில் சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சீமானுக்கு எதிரான பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.
இந்த நிலையில், பெரியார் விவகாரத்தில் சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்க திட்டமிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சீமான் வீட்டை தாக்க திட்டம் தீட்டியதாக, ராயப்பேட்டையில் தந்தை பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த 10 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நீலாங்கரையில் உள்ள சீமானின் இல்லத்தை தாக்க சென்றபோது, போலீசாரின் சோதனையில் 10 பேர் பிடிபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.