10 வயது சிறுமிக்கு சூடு வைத்து கொன்ற தாய்

 
death

பெரம்பலூர் அருகே நடத்தை சரியில்லை மற்றும் திருடுவதாக கூறி,  10 வயது சிறுமிக்கு சிறுமியின் தாய் மற்றும் அவரது உறவினர் இருவரும் சேர்ந்து சூடு வைத்ததில், அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 


பெரம்பலூர் அருகே வேப்பந்தட்டை திடீர் குப்பத்தில் வசிப்பவர் ராஜா- மணி மேகலை தம்பதி. இவர்களது 10 வயது மகள் மஹாலெட்சுமி என்பவர் ஒழுங்காக படிக்காமலும் நன்நடத்தை இன்றியும் இருந்த நிலையில் அடிக்கடி அவரது தாய் அந்த சிறுமியின் உதட்டிலும், காலிலும் சூடு வைத்து தண்டனை தந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மணிமேகலையின் உறவினரான மல்லிகா என்பவரது வீட்டில் இருந்த 70 ரூபாய் பணத்தை சிறுமி எடுத்து தின்பண்டம் வாங்கி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனால் சிறுமியின் தாயும், உறவினர் மல்லிகாவும் சிறுமிக்கு சூடு வைத்து, காய்ந்தமிளகாயை நெருப்பில் போட்டு அந்த நெடியை குழந்தையின் மூக்கில் இழுக்க செய்ததாக கூறப்படுகிறது. இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமியை அருகிலுள்ள கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து பின் கவலைக்கிடமாக திருச்சிக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று சிறுமி இறந்துவிட்டார். இது தொடர்பாக சிறுமியின் தாய் மணிமேகலை மற்றும் உறவினர் மல்லிகா இருவரிடமும் அரும்பாவூர் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

முதற்கட்டமாக சந்தேக மரணம் என வழக்குபதிந்துள்ள போலீசார் குழந்தைக்கு ஏற்கனவே உடல்நிலை சரியில்லை என்றும் சித்தரவதை செய்யப்பட்டு இறந்துள்ளது என்றும் முரண்பாடாக கூறப்பட்டதால், தனியாக மருத்துவ குழு அமைத்து உடற்கூறு ஆய்வுசெய்ய திட்டமிட்டுள்ளனர். தற்போது குழந்தையின் உடல் திருச்சி அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.