2 நாட்களில் ஊட்டிக்கு 1 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை..

கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறை நாளையொட்டி கடந்த 2 நாட்களில் மட்டும் 1 லட்சம் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தந்துள்ளனர்.
சுற்றுலா என்றால் பெரும்பாலானோருக்கு சட்டென நினைவில் வருவது ஊட்டி, கொடைக்கானல் தான். மலைப்பிரதேசமான இங்கு இதுதவிர அரசு தாவரவியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா, தொட்டபெட்டா, படகு இல்லம், லேம்ஸ்ராக் உள்ளிட்ட ஏராளமாக சுற்றுலா இடங்கள் உள்ளன. பொதுவாகவே ஏப்ரல் , மே மாதங்களில் சுற்றுலா பயணிகளின் அதிகளவில் வந்து செல்வர். தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாததாலும், வெயில் சுட்டெரிப்பதாலும் நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகின்றனர். அத்துடன் நிலகிரி மாவட்டத்தில் அரசு சார்பில் கோடை விழாவும், காய்கறி கண்காட்சிகளும் நடத்தப்பட்டு வருவதால், அவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அதைத்தொடர்ந்து கடந்த 13-ந்தேதி முதல் ஊட்டியில் ரோஜா கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
ஈபிள் டவர், கிரிக்கெட் மட்டை பந்துடன் மைதானம், கால்பந்து, காலணியுடன் கூடிய மைதானம் மற்றும் மயில் உள்ளிட்ட பறவைகளின் உருவங்கள், மஞ்சள் பை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெண் உருவம் என பல வண்ண மலர்களால் அமைக்கப்பட்டுள்ள வடிவங்கள், பூத்துக்குலுங்கும் ரோஜாக்களும் சுற்றுலாபயணிகளை வெகுவாக கவர்ந்து உள்ளன. கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறையை ஒட்டி கடந்த 2 நாட்களில் மட்டும் நீலகிரி மாவட்டத்துக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ரோஜா கண்காட்சியை 35 ஆயிரம் பேர் கண்டு ரசித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இந்த வாரமும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலா பயணிகளுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்க அனைத்துத்துறை அதிகாரிகளுக்கும் ஆட்சியர் அம்ரித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.