தமிழகம் முழுவதும் 1.68 லட்சம் மரக்கன்றுகளை நட்ட காவேரி கூக்குரல்

 
தமிழகம் முழுவதும் 1.68 லட்சம் மரக்கன்றுகளை நட்ட காவேரி கூக்குரல்

மரங்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த மரம் தங்கசாமி ஐயாவின் நினைவு தினத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் 1.68 லட்சம் மரக்கன்றுகள் நேற்று (செப்.16) நடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த மரம் தங்கசாமி ஐயா, ‘வாழ்வோம் மரங்களுடன்’ என்ற தாரக மந்திரத்துடன் டிம்பர் மர சாகுபடியை விவசாயிகளிடம் பிரபலப்படுத்தியவர். புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளிடம் மரம் சார்ந்த விவசாயத்தை ஊக்குவித்து மாவட்டத்தையே பசுமையாக மாற்றி காட்டியவர். விவசாயிகளின் வறுமையைப் போக்க டிம்பர் மரங்கள் சாகுபடியே சரியான தீர்வு என்பதை உணர்ந்து தன் வாழ்நாளை அதற்காக அர்ப்பணித்தவர். அவர் காவேரி கூக்குரல் இயக்கத்தின் தொடக்க கால இயக்கமான ஈஷா பசுமை கரங்கள் திட்டத்துடன் இணைந்து செயல்புரிந்தவர்.

இந்நிலையில், அவரின் சேவையை நினைவு கூறும் விதமாகவும், அவரின் நினைவு நாளில் விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் நடும் பணியை காவேரி கூக்குரல் இயக்கம் ஆண்டுதோறும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு, தமிழ்நாடு முழுவதும் 100 விவசாயிகளின் நிலங்களில் சுமார் 4000 ஏக்கர் பரப்பளவில் 1 லட்சத்து 68 ஆயிரம் டிம்பர் மரக்கன்றுகளை விவசாயிகள் மூலம் நடவு செய்து சாதனை படைத்துள்ளது. சுற்றுச்சூழலுடன் சேர்த்து விவசாயிகளின் பொருளாதாரமும் மேம்படும் வண்ணம், தேக்கு, மலைவேம்பு, கருமருது, வேங்கை, மஞ்சள் கடம்பு, மகாகனி, குமிழ், சந்தனம் உள்ளிட்ட விலைமதிப்புமிக்க டிம்பர் மரக்கன்றுகள் ஒரு மரக்கன்று ரூ.3 என்ற குறைந்த விலையில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டது.

மேலும், காவேரி கூக்குரல் இயக்கத்தின் களப் பணியாளர்கள் விவசாயிகளின் நிலத்தின் தன்மை மற்றும் எதிர்கால தேவை ஆகியவற்றை பரிசீலித்து அதற்கேற்ப மண்ணுக்கேற்ற மரங்களை பரிந்துரைத்தனர். அத்துடன், அவற்றை முறையாக நடும் வழிமுறைகளையும் எடுத்துரைத்தனர். இதற்கு முன்பு நம்மாழ்வார், நெல் ஜெயராமன், மகாத்மா காந்தி போன்றோரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களிலும் இதுபோன்ற மாபெரும் மரக்கன்றுகள் நடும் பணியை இவ்வியக்கம் மேற்கொண்டது குறிப்பிடத்தது. மரம் சார்ந்த விவசாயம் தொடர்பாக இலவச ஆலோசனைகள் பெற விரும்பும் விவசாயிகள் 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.