முதுமலை தம்பதிக்கு ரூ.1 லட்சம் : வீடு கட்ட ரூ. 9.10 கோடி நிதியுதவி - முதல்வர் அறிவிப்பு..

 
stalin

முதுமலை, ஆனைமலையில் உள்ள யானைகள் முகாம்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,யானை பராமரிப்பாளர்களுக்கு  உகந்த வீடுகள் கட்ட ரூபாய் 9.10 கோடி நிதி உதவியை அரசு வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.  

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (15-3-2023) தலைமைச் செயலகத்தில், முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் எடுக்கப்பட்ட ஆஸ்கர் விருது பெற்ற ‘The Elephant Whisperers’ ஆவணப் படத்தில் இடம் பெற்ற ரகு எனும் யானைக் குட்டியின் பராமரிப்பாளர்களான பொம்மன்,  பெல்லி தம்பதியர்கள் சந்தித்தனர். இவர்களுக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வாழ்த்து தெரிவித்து, பாராட்டுப் பத்திரமும், பொன்னாடையும் அணிவித்து தலா 1 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.  

முதுமலை தம்பதிக்கு ரூ.1 லட்சம் : வீடு கட்ட ரூ. 9.10 கோடி நிதியுதவி - முதல்வர் அறிவிப்பு..
    
இந்த ஆவணப் படத்தின் மூலம் தமிழ்நாடு வனத்துறையின் செயல்பாடு மற்றும் யானைகள் பராமரிப்பு முறை உலக அளவில் கவனம் பெற்றது.  தமிழ்நாட்டில் உள்ள இரண்டு யானைகள் முகாம்களான முதுமலையில் உள்ள தெப்பக்காடு மற்றும் ஆனைமலையில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமில் மொத்தம் 91 பணியாளர்கள் பணி புரிந்து வருகிறார்கள். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து நல்கை வழங்கப்படும் என  முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். மேலும், யானை பராமரிப்பாளர்களாகிய இவர்கள்  வசிக்கத் தேவையான சுற்றுச்சூழலுக்கு இசைந்த, அவர்கள் பண்பாட்டிற்கு உகந்த வீடுகள் கட்ட ரூபாய் 9.10 கோடி நிதி உதவியை அரசு வழங்கும் எனவும் அறிவித்துள்ளார்கள். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாமை ரூபாய் 5 கோடி செலவில் மேம்படுத்தவும் அரசு அறிவித்துள்ளது.

முதுமலை தம்பதிக்கு ரூ.1 லட்சம் : வீடு கட்ட ரூ. 9.10 கோடி நிதியுதவி - முதல்வர் அறிவிப்பு..

கோவை மாவட்டத்தில், சாடிவயல் பகுதியில், யானைகள் பராமரிக்கத் தேவையான தங்கும் இடங்கள் மற்றும் அடிப்படை வசதிகளுடன் ஒரு புதிய யானைகள் முகாம் ரூபாய் 8 கோடி செலவில் அமைக்கப்படும்.  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 2022-ஆம் ஆண்டு உதகை பயணத்தின் போது முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் “அதிநவீன யானைகள் பாதுகாப்பு மையம் மற்றும் சுற்றுச்சூழல் வளாகம்” ஒன்று ஏற்படுத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். இது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளன.” என்று தெரிவித்தார்.