அண்ணாமலைக்கு சீட் தராதது? - பியூஷ் கோயல் விளக்கம்
தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பணியாற்ற விரும்பியதால் அண்ணாமலை போட்டியிடவில்லை என பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அண்ணாமலையின் பெயர் இடம்பெறவில்லை. 2021 சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு, தோல்வி அடைந்திருந்தார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல், “கட்சிக்காகவும், மக்களுக்காகவும் நீண்ட காலம் சேவையாற்றியவர்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்காக அறிவிக்கப்பட்ட பாஜக வேட்பாளர்கள் அனைவரும் அமோக வெற்றி பெறுவர். தமிழ்நாட்டின் அனைத்து பிரிவு மக்களும் மாற்றத்தை எதிர்நோக்கி உள்ளனர். மாநிலத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள், ஒவ்வொரு வேட்பாளர்களின் விருப்பம் உள்ளிட்ட பல விஷயங்கள் வேட்பாளர் தேர்வில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன. அண்ணாமலை பாஜகவில் அர்ப்பணிப்புடன் பணியாற்றக்கூடியவர். அவர் குறிப்பிட்ட தொகுதி என்றில்லாமல் மாநிலம் முழுவதும் பணியாற்ற விரும்பினார். ஆகவே தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பணியாற்ற விரும்பியதால் அண்ணாமலை போட்டியிடவில்லை. பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் இம்முறை அனுபவம் வாய்ந்தவர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அமையவுள்ள எடப்பாடி பழனிசாமியின் அரசு அனைவருக்குமான அரசாக இருக்கும்” என்றார்.

