ஜெம் வீரமணி வீட்டில் சிறுமி சடலம் புதைப்பா?.. டிரைவர் வாக்குமூலத்தின் அடிப்படையில் வீட்டின் பின்புறம் ஜேசிபி மூலம் தோண்டும் போலீஸ்..!!

 
1

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில், ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி மற்றும் அவருடன் தொடர்புடையவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ஜெம் வீரமணி உள்ளிட்ட மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கடந்த ஆண்டே ஜெம் வீரமணிக்கு எதிராகப் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அந்தப் புகாரின் அடிப்படையில் உரிய விசாரணை நடத்தப்படாமல் காவல்துறை அதிகாரிகளின் தூண்டுதலின் பேரில் வழக்கை முடித்து வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

இதையடுத்து சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் மற்றும் தனிப்படைக் காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது வழக்கின் ஆரம்பகட்ட விசாரணை மற்றும் அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் காவல்துறை அதிகாரிகளின் பங்கு குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட 7 காவல்துறை அதிகாரிகள் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர். மேலும் ஆரம்பத்தில் புகார் பெறப்பட்டபோது, ​​ஆதாரங்களை மறைத்தது, ஆவணங்களைத் திருத்தியது மற்றும் கடுமையான குற்றங்கள் குறித்த தகவல்களைப் பதிவு செய்யத் தவறியது ஆகிய குற்றச்சாட்டுகள் இந்த அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் முன்னாள் காவல் ஆணையர் அருண் உட்பட ஏழு காவல்துறை அதிகாரிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜெம் வீரமணி மீது 2024ஆம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டபோது சென்னை காவல்துறையில் இவர்கள் 7 பேரும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் காவல்துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் தொடர்பான விசாரணை விரிவடைந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு துணை ஆணையர்கள், ஒரு உதவி ஆணையர் என மூன்று பெண் காவல் அதிகாரிகள் மீது நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டிரைவர் பாலாவிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் பகீர் தகவலை தெரிவித்துள்ளார். அதாவது ஜெம் வீரமணி வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட சிறுமிக்கு ஜெம் வீரமணி பாலியல் தொல்லை கொடுத்த போது திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாம்.

இதனால் அந்த சிறுமி இறந்துவிட்டாராம். என்ன செய்வது என தெரியாமல் தவித்த நிலையில் சிறுமியின் உடலை தனது வீட்டின் பின்புறத்திலேயே புதைக்குமாறு ஜெம் வீரமணி சொன்னார் என டிரைவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து அந்த டிரைவருடன், சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஜெம் வீரமணியின் வீட்டிற்கு சென்ற போலீஸார், சிறுமி எங்கே புதைக்கப்பட்டார்? என கேட்டு, அவர் சொன்ன இடத்தில் ஜேசிபி இயந்திரம் வைத்து தோண்டி வருகிறார்கள்.