‘குடியை மறக்க கயிறு கட்ட கோயிலுக்கு சென்ற விவசாயி’ : கடைசியாக குடிக்கலாம் என்று நினைத்ததால் நடந்த விபரீதம்!

குடியை மறக்க கயிறு கட்ட கோயிலுக்கு சென்ற விவசாயி ஒருவர் இறுதியாக குடிக்கலாம் என்று முடிவெடுத்ததால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கடலூர் : குடியை மறக்க கயிறு கட்ட கோயிலுக்கு சென்ற விவசாயி ஒருவர் இறுதியாக குடிக்கலாம் என்று முடிவெடுத்ததால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள தட்டாம் பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். 45 வயதான இவர் விவசாயம் செய்து வருகிறார். கார்த்திகேயன் குடிப்பழக்கம் கொண்டவர், தினமும் குடித்துவிட்டு குடும்பத்தில் உள்ளவர்களிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் பண்ருட்டி அருகே உள்ள கொஞ்சிக்குப்பம் கிராமத்தில் இருக்கும் அய்யனார் கோயிலுக்குச் சென்று குடிக்க மாட்டேன் எண்டு கூறி கையில் கயிறு கொண்டால் குடிப்பழக்கம் இல்லாமல் போய் விடும் என்று பலரும் யோசனை கூறியுள்ளனர்.
இதை ஏற்றுக்கொண்ட கார்த்திகேயன் அய்யனார் கோயிலுக்கு செல்ல முடிவெடுத்துக் கிளம்பியுள்ளார். கோயிலுக்கு செல்லும் வழியில் டாஸ்மாக் கடை இருப்பதைக் கண்ட அவர், கடைசியாகக் குடித்து விட்டு செல்லலாம் என்று நினைத்து கடைக்குள் சென்று அளவுக்கு அதிகமாக கொடுத்துவிட்டு கோயிலுக்கு மீண்டும் புறப்பட்டுள்ளார். ஆனால் செல்லும் வழியிலேயே நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.
நீண்ட நேரம் மயங்கி கிடந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.
இதுகுறித்து கடாம்புலியூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மட்டுமில்லாது அப்பகுதி மக்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

