கார்ல்சனின் ஓவர் கான்ஃபிடன்ஸுக்கு பதிலடி கொடுத்த குகேஷ்..!!
உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை, நடப்பு உலக சாம்பியனும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான குகேஷ் மீண்டும் வீழ்த்தியுள்ளார்.
குரேஷியாவில் உள்ள ஜாக்ரெப் நகரில் ரேபிட் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். அந்தவகையில் இந்தியா சார்பில் தமிழக வீரர்களான பிரக்ஞானந்தா, குகேஷ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி வருகின்றனர். இதில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நடப்பு உலக சாம்பியனான குகேஷ், ரேபிட் செஸ் போட்டி புள்ளிப்பட்டியில் முதலிடத்தில் இருந்து வருகிறார்.

முன்னதாக நான்காவது சுற்றில் உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெர்க்கை வீழ்த்திய குகேஷ், ஐந்தாவது சுற்றில் அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் ஃபேபியானோ கருவானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். அந்த ஆட்டத்தில் உலகின் நம்பர் 1 வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார். 49வது நகர்வின்போது கார்ல்சனை வீழ்த்தி குகேஷ் வெற்றிபெற்றார். போட்டியை வர்ணனை செய்த 13 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற கேரி காஸ்பரோவ், குகேஷ் வென்றது அதிர்ஷ்டம்; இது ஆணித்தரமான வெற்றி என்று கூறியிருக்கிறார்.
போட்டிக்கு முன்பாக பேட்டியளித்த கார்ல்சன், குகேஷ் தனக்கு ஒரு பெரிய விஷயமில்லை என்றும், ரேபிட் செஸ் போட்டி குகேஷுக்கு சரிபட்டு வராது என்றும் அலட்சியமாக கூறியிருந்தார். ஆனால் அவரது ஓவர் கான்ஃபிடன்ஸுக்கு தனது வெற்றி மூலம் குகேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.


